Friday, December 3, 2010

பெயர்காரணம்

ஓட்டப்பிடாரம்
>>>>>>>>>>>>>>>>>>>

இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதுடன் அந்நிய நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியான பொருட்களைப் பயன்படுத்தாமல் சுதேசிக் கொள்கைக்காக 1906-ல் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைத்து, கடல் வணிகம் செய்ததால் சிறைத் தண்டனை பெற்று, கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பு பெயர் பெற்ற வ.வ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியும் . அவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் என்பதும் தெரியும். ஓட்டப்பிடாரத்துக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பது தெரியுமா?
ஓட்டப்பிடாரம் என்னும் ஊர் படாரர், படாரன், பிடாரி, பிடரி, பிடாகை, ஓட்டன் என்கிற மிக அருமையான தமிழ்ப் பண்பாட்டுச் சொற்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்துப் பழங்காலக் கோவில்களில் மிகுதியான கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், இலக்கியச் சான்றுகளை ஏற்றும் ஓட்டப்பிடாரம் என்ற ஊர்ப் பெயர் விளக்கத்தைக் காண்போம்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள காலத்து கல்வெட்டுக்கள் சமண முனிவர்களைப் படாரர் என்று குறிப்பிடுகின்றன. முந்தைய காலங்களில் சிவபெருமானைப் பிடாரன் என்றும் குறிப்பிட்டனர். பாம்பாட்டியைப் பாம்புப் பிடாரன் என்று திருநெல்வேலி பகுதி மக்கள் இன்றும் கூறுகிறார்கள். பாம்பை மாலையாக அணிந்த கடவுளே சிவபிடாரன் ஆவார்.
முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள். இப்பகுதியில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது. அடக்கமாக வாழ வழியறியாது திரியும் பெண்களை 'அடங்காப் பிடாரி' என்று பழித்தும் உரைப்பார்கள்.
சைவமடத்து ஆதீனத் தலைவர்களைத் தம்பிரான் என்று அழைக்கிறார்கள். திருவாரூரில் தியாகேசப் பெருமானுக்கு மிக நெருங்கிய நண்பர் என ஒட்டி உறவாடியவரும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரைத் 'தம்பிரான் தோழர்' என்பார்கள். கேரளாவில் தங்களுடைய எஜமானர், எஜமானியர்களை, இக்காலத்திலும் தம்புரான், தம்புராட்டி என்றுதான் கூறுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்கிற ஊரிலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வன்னிக்கோனேந்தல், கரிவலம் வந்த நல்லூர் முதலிய ஊர்களிலும் தம்பிராட்டி அம்மன் கோவில்கள் மிகச் சிறப்புடன் இருந்து வருகின்றன.
மதுரை மாநகரின் ஒரு பகுதியாக உள்ள விராட்டிபத்து என்கிற ஊர் பிராட்டியார் பத்து என்ற பெயருடன் விளங்கி அதன் பின் மருவி விராட்டி பத்து ஆகியிருக்க வேண்டும். பத்து-பத்துக்காடு என்பது நல்ல நெல்விளையும் நன்செய் நிலங்களைக் குறிப்பதாகும். இதேபோல் மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிப்பட்டி என்ற ஊரும் முன்பு பிடாரிப் பத்து-வாக இருந்து பின் பிடாரிப்பட்டி ஆகி தற்போது கிடாரிப்பட்டியாக மருவியிருக்க வேண்டும்.
சைவசமயக் கோவில்களில் தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழிசையோடு விண்ணப்பஞ் செய்து வரும் இசைவாணர்களைப் பிடாரர்கள் என இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே பிடாரர், பிடாரி, பிடாரன் என்கிற பண்டைய தமிழ் சொற்களே தற்காலத்தில் பிரான், பிராட்டி என மரூஉ மொழியாக தசை என்பது சதை என்று ஆனது போல வழங்குகின்றன.
மனிதனுடைய தலையை உடம்போடு இணையச் செய்யும் பகுதி 'கழுத்து' ஆகும். கழுத்தின் முன் பகுதி 'தொண்டை' என்றும் பின் பகுதி 'பிடரி' என்றும் சொல்வோம். மனிதனுக்கு உயிர்ப்புத் தன்மை வழங்கும் தைராய்டு கிளாண்ட்சு தசைநார்களும், நிணநீர்ச் சுரபிகளும் அமைந்த பகுதியைப் பிடரி என்று அழைக்கிறோம். குதிரைக்குப் பிடரி மயிர் அழகு , காளை மாட்டிற்குப் பிடரி என்னும் திமில் அழகு, ஆகவே பிடரி என்னும் சொல்லும் பிடாரி என்று அழைக்கப் பெறும் ஆற்றல்-சக்தி என்ற பெண் தெய்வப் பெயரும் தமிழரிடையே இன்றும் வழங்கி வருகின்றன. பிடர், பீடு என்ற சொற்கள் உயிர்ப்பு,உயர்வு,பெருமை என்னும் பொருளைத் தரும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைவ, வைணவக் கோவில்களில் திருப்பணிகள் செவ்வனே நடைபெற அக்கால மன்னர்களால் தேவதானமாக வழங்கப் பெற்ற ஊர்கள் நிறைய உண்டு. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் ஸ்ரீ பராங்குச நல்லூர்க் கீழ்ப்பிடாகை, ஸ்ரீ பராக்கிரம பாண்டியபுரம் கீழ்ப்பிடாகை, கீழ்ப்பிடாகை கஸ்பா வரதராஜபுரம் என்னும் ஊர்கள் இன்றும் உள்ளன. இவை போன்ற பெயருடைய பல ஊர்களைத் தமிழகம் முழுவதும் காண முடிகிறது. பிடாரன் கோவிலுக்கு உரிமையாக்கப் பெற்ற நிலங்கள் உள்ள ஊரானது பிடாகை என அழைக்கப் பெற்றது.
இராமயணக் காவியத் தலைவன் இராமன் லிங்க வடிவமுடைய சிவபெருமானை வணங்கி வழிபட்ட தலம் இராமேசுவரம் ஆகும். இராசராச சோழன் தஞ்சையில் பெருவுடையாருக்குப் பெருங்கோவில் வழிபட்ட இடம் இராசராசேசுவரம் ஆகும். இராஜா ஆட்சி செய்யும் நிலப் பகுதி இராஜ்ஜியம். அதுபோல சிவனாகிய ஈசுவரன் குடிகொண்ட கோவில் ஈசுவரம் எனப்படும். ஈசுவரன், ஈசுவரி, ஈசுவரம் என்பவை தமிழ் வடிவம் பெற்ற வடமொழிச் சொல்லாகும். இம்மூன்று பெயர்ச் சொற்களும் பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரைப் பகுதி மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆகவே பிடாரன் ஆகிய சிவபெருமான் குடிகொண்ட கோவில் இடம் பிடாரம் ஆகும்.
-இவை அனைத்தும் ஓட்டப்பிடாரம் என்னும் ஊரின் பின் பகுதிப் பெயாரான பிடாரம் என்பதற்கு விளக்கமாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பர் காலத்தில் வாழ்ந்த முதிர்ந்த பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். சோழப் பேரரசர்களான விக்கிரம சோழன் (கி.பி.1118-1133) ,இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150), இரண்டாம் இராசராசன் (கி.பி.1150-1163) ஆகிய மூன்று தலைமுறைச் சோழப் பேரரசர்களின் அவைக்களப் புலவராகச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியவர். இம்மூன்று பேரரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இவர் தனித்தனியே உலா இலக்கியங்கள் மூன்றை இயற்றியுள்ளார்.
வான்மீகி இராமாயணத்தின் இறுதிப் பகுதியாகத் தமிழில் அமைந்த உத்திர காண்டம் என்னும் காவியமும், தக்கயாகப்பரணி என்ற நூலும் இந்த ஒட்டக்கூத்தர் இயற்றியதாக அறியப்படுகிறது. இப்புலவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் ஏன் வந்தது? மூன்று தலைமுறை சோழப்பேரரசர்களிடமும் அவர்கள் குடும்பத்தினரிடமும் ஒட்டி, மிக நெருங்கிப் பழகியவர் என்பதால் 'ஒட்டர்' என்றும் முத்தமிழிலும் வல்லவராக இருந்ததால் 'கூத்தர்' என்றும் அழைக்கப் பெற்றார். ஒட்டக்கூத்தர் என்ற பட்டப் பெயருடன் புலவர் முற்றூட்டாகக் கூத்தங்குடி, கூத்தனூர் என்னும் நல்லூர்களையும் பெற்றார். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள கூத்தங்குடி என்ற சிற்றூரை இன்றும் காணலாம். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்னும் ரயில் நிலையம் அருகில் கூத்தனூர் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனால் இப்புலவருக்கு முற்றூட்டாக இவ்வூர் வழங்கப் பெற்றதாகும். இக்கூத்தனூரின் ஆற்றங்கரையிலுள்ள கலைமகள் கோவிலில் உள்ள கல்வெட்டால் இது அறியப்படுகிறது.
உலகத்தோ ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்                     -குறள் 140-ஒழுக்கமுடைமை.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறை நிலத்தொ(டு) ஒட்டல் அரிது.                              -குறள் 499-இடனறிதல்
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர். அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு                       -மூதுரை – செய் 17

-இம் மூன்று செய்யுட்களிலும் திருவள்ளுவரும் ஒளவையும் மிக நெருங்கிய நட்பு உரிமையை ,ஒட்ட, ஒட்டி என்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதுபோலவே

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்தே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்               -குறள் 679-வினைசெயல் வகை
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப் படும்                   -குறள் 826-கூடாநட்பு
- இந்த இரு குறட்பாக்களிலும் 'ஒட்டார்' என்ற சொல்லால் பகைவரைத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.
கம்பராமாயணம் யுத்த காண்டம்- வீடணன் அடைக்கலப் படலத்தில் சுக்கிரீவன் கூற்றாக உள்ள

'ஒட்டிய கனகமான் உருவம் ஆகிய சிட்டனும் '
யுத்த காண்டம்- கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஆசிரியர் கூற்றாக உள்ள
'ஒட்டிய நாயகன் வென்றிநாள் குறித்தொளிர் முளைகள்'
யுத்த காண்டம்- மீட்சிப் படலத்தில் பரதன் கூற்றாக உள்ள
'இவ்வுலகை உலைய ஒட்டான் அத்திருக்கும் கெடும்'
அயோத்தி நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் கூற்றாக உள்ள
'பெண்நாட்டம் ஒட்டேன் இனிப்பேர் உலகத்துள் என்றான்'
-என்கிற தொடர்களிலும் வேறுபல இடங்களிலும் ஒட்டிய, ஒட்ட, ஒட்டான், ஒட்டேன் என்னும் சொற்களைக் கம்பர் எடுத்தாளுகிறார். மேற்காணும் செய்யுட்களிலிருந்து 'ஒட்டன்' என்றால் மிக நெருங்கிய நண்பர் என்றும், 'ஒட்டார்', 'ஒட்டலன்' என்றால் பகைவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிஞர் அண்ணா தமிழகத்தில் தம் எதிர்க்கட்சிக்காரர்களை அடையாளம் காட்டும்போது 'நம்முடன் ஒட்டும் உறவும் இல்லாதவர்' என்று அரசியல் மேடைகளில் கூறி வந்ததை இவ்விடத்தில் நாம் நினைவு கூறலாம்.
ஜெயங்கொண்டம் அருகில் ஒட்டக்கோவில் என்னும் பெயருடன் சிவன் கோவில் உள்ள ஒரு ஊர் உள்ளது. இதேபோல் வீரவாஞ்சி மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டநத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டன் சத்திரம். கடம்பூர் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டுடன்பட்டி. இந்த ஊர்ப் பெயர்களை இணைத்து நாம் சிந்திக்க வேண்டும்.
அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் மன்னன் கழற்சிங்கன் சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தான். அதற்கு குடமுழுக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்து அதற்கான நாளும் நேரமும் குறித்தான். காஞ்சிக்கு சற்று தொலைவில் உள்ள சிற்றூரில் அடியார் ஒருவர் வாழ்ந்தார். அவர் தாமும் ஓர் கற்றளியைப் பெருமானுக்கு அமைக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டார். கையில் பொருளில்லாதவரான அடியாரால் என்ன செய்ய முடியும்? அதனால் தன் மனத்திலேயே சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தார். குடமுழுக்குக்கு நாளும் நேரமும் தம் மனதிலேயே குறித்துக் கொண்டார். அரசன் கழற்சிங்கன், அடியார் குறித்த குடமுழுக்கு நாளும் நேரமும் ஒன்றாகிப் போனது. இதனால் அரசன் நடத்தும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும் அடியார் அமைத்த கோவில் விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கழற்சிங்கன் கனவில் தோன்றி சிவபெருமான் கூறினார். அரசன் அடியவரைப் போற்றினான். அவர் வாழ்ந்த இடத்திற்குத் திருநின்றவூர் என்றும் பெயர் சூட்டினான். சிவனருள் பெற்ற திருத்தொண்டரை பூசலார் நாயனர் என்று அழைத்துப் போற்றினான். பூசல் என்றால் மாறுபாடு. மனத்திலே கோவில் அமைத்த அடியார் ஏனைய மக்களினும் சிந்தனைத் திறனிலும் மாறுபட்டவர். பூசலுடையவர் என்று உலகத்தாரும் அறிந்து கொண்டனர். இவ்வாறு பூசலார் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
நாம் ஒட்டக்கூத்தர் என்ற புலவரின் பெயர் விளக்கத்துடன் பூசலார் நாயனார் வரலாற்றையும் இணைத்து 'ஒட்டன்' என்கிற சொற்பொருளுக்குரிய சிறப்பையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தென்பாண்டிச் சீமையின் கரிசல்மண் பூமியில் கங்கைவார் சடையும் பாம்பணியும் கொண்ட சிவபெருமான் தன்னுடன் ஒட்டி உறவாடிய சிவத்தொண்டரான பிடாரர் ஒருவர் அமைத்துள்ள திருக்கோவிலில் குடி கொண்டார். ஆகவே இவ்வூர் 'ஒட்டன்பிடாரம்' என்றிருந்து ஒட்டப்பிடாரமாகி பின்னால் அதிலிருந்து மருவி 'ஓட்டப்பிடாரம்' என மருவி வழங்கலாயிற்று. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment