Friday, November 19, 2010

மொழிபெயர்ப்பு கவிதைகள்

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..??"

அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!!"

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..
நான் கோபத்துடன்,
"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!
----
மொழிபெயர்ப்பு மீனாட்சி சங்கர்
************************************************





பசி
-- ஜாவேத் அக்தர்


பொழுது புலர கண்கள் திறந்து
மீண்டும் உயிர் பிழைத்தேன்
வயிற்றின் இருளிலிருந்து
மூளையின் புகைமூட்டம் வரை
பாம்பாய் ஊர்ந்தோர் எண்ணம்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

அறையில் ஒருவித அமைதி
உறைந்து கிடக்கிறது
ஒரு தரை, ஒரு கூரை
நான்கு சுவர்கள்- என்னுடன்
எவ்வித தொடர்புமில்லாமல்
பார்வையாளர்களாய் பார்த்தபடி

எதிர் ஜன்னல் வழி
படுக்கையில் படரும்
சுடு வெயில் கதிர்கள்
குத்துகிறது முகத்தில்
உறவுகளின் கூர்மையோ
வேலி முட்களைப் போல்
ஏழ்மையைக் குத்திக் காட்டும்

கண்களைத் திறக்கிறேன்
வெறுமையாய் இருக்கிறேன்
ஓடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது

படுக்கையில் கிடக்கிறது
என்னுடைய பூத உடல்
ஜீவனற்றக் கண்களுடன்
அறையை அலசுகிறேன்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்


நன்பகல் வெம்மையில்
நடக்கிறேன் திக்கற்று
நீண்ட சாலையின்
இருபுறக் கடைகளிலும்
பார்வையில் பட்டது
பெயர்ப் பலகைகளை
வாசிக்க முடியாது
வந்து போகிறார்கள்
வழிப்போக்கர்கள்
அருகிலிருந்து கடந்தும்
மங்கலாகத் தெரிகிறார்கள்
முகமற்றவர்களைப் போல

பாதை நிரப்பும்
கடைகளில் பெருஞ்சத்தம்
கெட்டவார்த்தை வார்த்தைகள்
வானொலி ஓசைகள்
தூரத்தின் எதிரொலிகள்
அனைத்தும் கேட்கிறது

பார்ப்பது அனைத்தும்
கனவாய் தெரிகிறது
இருப்பது போலும்
இல்லாதது போலும்
நன்பகல் வெம்மையில்
நடக்கிறேன் திக்கற்று
எதிர்வரும் சந்தியில்
பார்வையில் படுகிறது
நீர்க் குழாய் ஒன்று

திடமாய் இருக்கும் நீர்
சிக்குகிறது தொண்டையில்
வயிற்றில் காற்று
நிரப்பியதாய் காட்சியளிக்கிறது
மயக்கமாக வருகிறது
உடலெங்கும் வேர்க்கிறது
இனியும் வலுவில்லை
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

எங்கும் இருள் சூழ
கரையில் நிற்கிறேன்
கல்லாலான படிகளில்
படுத்துக் கிடக்கிறேன்
என்னால் எழ முடியாது
வானத்தைப் பார்க்கிறேன்
வானமெனும் தட்டில்
நிலாவெனும் சப்பாத்தி
கனத்த இமைகள் தாழ்கின்றன
நிலவெளிகள் மறைகின்றன
சுழல்கிறது இவ்வுலகம்

வீட்டில் அடுப்பிருந்தது
தினமும் சமையல் நடந்தது
தங்கமாய் சப்பாத்திகள்
சுடச்சுடச் சாப்பாடு
திறக்கவில்லை கண்கள்
காரணம் நான் சாகப் போகிறேன்

மாறுபட்டவள் அன்னை
தினமும் உணவூட்டுவாள்
அந்த குளிர்ந்த கைகளால்
தீண்டுகிறாள் முகத்தை
ஆணைக்கு ஒரு பிடி
குதுரைக்கு ஒரு பிடி
கரடிக்கும் ஒரு பிடி
இது மரணமா?
இல்லை மயக்கமா?
எதுவானாலும் ஏற்புடையதுதான்
இன்று மூன்றாவது நாள்
இன்று மூன்றாவது நாள்

மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா

                                           -தொடரும்..........

Monday, November 15, 2010

சாதனைப்பெண்கள்

எனக்கு வாழ்க்கை தந்தது விளையாட்டுதான்' என்கிறார் கைப்பந்து வீராங்கனை கலைவாணி. மாநில அணியில் இடம்பெற்றுள்ள இவர் எதிர்கொண்ட சவால்கள் பல. விளையாட்டுக்காக பொறியியல் படிப்பை உதறியவர் கலைவாணி. கைப்பந்து என்றால் கலைவாணி என்று பெயர் சொல்லும் அளவுக்கு முன்னேறுவேன் என்று உறுதியோடு கூறும் அவருடன் ஒரு சந்திப்பு... கல்லூரியில் படிக்கும் அவர் புத்தகமும் கையுமாக இருப்பார் என்று பார்த்தால் ஜிம்மில்தான் கலைவாணியை சந்திக்க முடிந்தது. வாழ்வில் விளையாட்டுக்கு முதலிடம் அளிக்கும் அவர் படிப்பைவிட பயிற்சிதான் முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
கலைவாணி ஈரோடு மாவட்டம் கோபி பி.கே.ஆர்.மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கிறார். கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில், வியர்வை துளிகள் முகத்தில் வழிந்தாலும் பயிற்சியில் கவனமாக இருந்தார் கலைவாணி. கண்கள் நிறைய கனவு, சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருப்பதை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கலைவாணி. ஈரோட்டில் படித்து வருகிறார். சிறுவயதிலேயே விளையாட்டு மீது அவருக்கு தீராத ஆர்வம். திருவண்ணாமலை அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படிக்கும்போது, கைப்பந்து அணியில் சேர்ந்தார். ஆசிரியை தமிழ்ச்செல்வி கொடுத்த ஊக்கம் மற்றும் கைப்பந்து கோர்ட்டுக்குள் ஏற்பட்ட ஒரு தாக்கம் அவரை சிறந்த வீராங்கனையாக மாற்றியது என்கிறார்.
எளிய குடும்பத்தில் பிறந்த அவரை வறுமை ஒருபுறம் வாட்டியது. தந்தை பி.ஆறுமுகம். தாயார் பங்காரு. சிறிய இட்லி கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதற்கிடையே கலைவாணி 8-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூட அணி மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றது.
போட்டியில் கலைவாணியின் சாதுரியமான ஆட்டம் மாவட்ட அளவில் கைப்பந்து வீரர்-வீராங்கனைகளின் கவனத்தை ஈர்த்தது. அவருடைய விளையாட்டுத் திறமையை பார்த்த அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அதிகாரி தர்மராஜ் தனிக்கவனம் எடுத்து கலைவாணிக்கு பயிற்சி அளித்தார். இதனால் 9-ம் வகுப்பில் மாநில கைப்பந்து அணிக்குத் தேர்வு பெற்றார்.
விளையாட்டால் அடையாளம் காணப்பட்ட கலைவாணிக்கு அதுவே படிப்பிலும் ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது. விளையாட்டோடு படிப்பிலும் கவனம் செலுத்தி பிளஸ்-2 படிப்பை முடித்தார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த அவர் சென்னையில் ஒரு பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை கலைவாணியே கூறுகிறார்...
"விளையாட்டால்தான் நான் வாழ்க்கை பெற்றேன். விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில்தான் எனக்கு பொறியியல் படிப்புக்கான 'சீட்' கிடைத்தது. கல்வி, தங்கும் இடம் அனைத்தும் இலவசம். சந்தோஷமாகத்தான் இருந்தது. 2 மாதங்கள் வகுப்புக்கு சென்றேன்.
  
ஒருநாள் என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்தினர், "விளையாட்டு இட ஒதுக்கீட்டில் உனக்கு இடம் கிடைத்திருந்தாலும், இனிமேல் நீ விளையாட வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்து" என்று கட்டுப்பாடு விதித்தார்கள். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.

படிப்பு முக்கியம்தான். ஆனால் கைப்பந்து வீராங்கனையாகி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் என் கனவு. அதற்கு அவர்கள் கட்டுப்பாடு விதித்தபோது எனக்கு விழிகளில் கண்ணீ­ர் திரண்டது.
என்னுடைய பயிற்சியாளர் ஆனந்தகுமாரை தொடர்பு கொண்டு, தகவல் சொன்னேன். அவர்தான் என்னை கோபி பி.கே.ஆர். கல்லூரியில் சேர்த்து விட்டார். கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர் ஜெகதா லட்சுமணன், உடற்கல்வி பேராசிரியை சாவித்திரி ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் நான் இன்றும் விளையாட்டில் புத்துயிருடன் ஆடி வருகிறேன்" என்றார்.
கலைவாணி இதுவரை 7 தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 2 போட்டிகளில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் வாழ்வில் நடந்த இன்னொரு மாற்றத்தை அவர் விவரிக்கிறார்...
"2003-ம் ஆண்டு 16-வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஊரக விளையாட்டு போட்டியில் முதன் முதலாக தமிழக அணிக்காக விளையாடினேன். போட்டியின்போது நான் அட்டாக் வீராங்கனையாக களம் இறங்கினேன். ஆனால், அன்றைக்கு அணி இருந்த நிலையில் திடீரென்று என்னை லிப்ரோ பகுதியில் விளையாட கூறினார்கள்.
லிப்ரோ என்றால், எதிர் அணியில் இருந்து அட்டாக் வீராங்கனை 'கட்' அடித்துவிடும் பந்துகளை லாவகமாக தரையில் விழாமல் எடுத்து விடும் களமாகும். எனக்கு அந்த லிப்ரோ பகுதி புதிது. ஆனால், மன உறுதியுடன் விளையாடினேன். அந்தப் போட்டியில் ஜெயித்தோம். எங்கள் அணி 3-ம் இடம் பிடித்தது. போட்டி முடிந்ததும் சக வீராங்கனைகள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். அன்றுமுதல் நான் லிப்ரோ பகுதியில் விளையாடி வருகிறேன்.
கைப்பந்து வீராங்கனைகள் ஒவ்வொருவரும் லிப்ரோ என்றால் அது கலைவாணி என்று கூறும் அளவுக்கு என்னை தயார்படுத்திக்கொள்வதே என் கனவு" என்கிறார் கலைவாணி.
  
வறுமை விதித்த தடையால் 'நான் மட்டும் விளையாட்டிற்கு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது' என்று கூறும் கலைவாணி விளையாட்டை மிக உயர்வாக மதிக்கிறார்.

"விளையாட்டு இப்போது எனக்கு தைரியத்தை கொடுத்து இருக்கிறது. வாழ்க்கையின் மீது இருந்த பயத்தை போக்கி இருக்கிறது. கைப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக மாறி இருக்கிறது" என்று கூறும் கலைவாணி எம்.சி.ஏ. படித்து நல்ல வேலையில் சேருவேன் என்கிறார்.
உலக அளவில் கைப்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நம் நாட்டில் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம் இல்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, கைப்பந்து விளையாட்டை பொறுத்தவரை, அதிகம்பேர் ரசிக்கும் விளையாட்டாக இருந்தாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத விளையாட்டாக இருக்கிறது.
எனவே அரசு எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கைப்பந்து என்பது குழு விளையாட்டு. இதில் ஒட்டுமொத்தமாக அனைவரும் இணைந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணி வெற்றி பெறும். ஒரு அணி தோல்வி அடைந்தால், அதில் சிறப்பாக விளையாடும் வீராங்கனையும் வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கைப்பந்து வீரர்-வீராங்கனைகளுக்கு தனித்தனியாக அவர்களின் திறமையை கணித்து வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்தார் கலைவாணி

சாதனையாளர்களின் அணிவகுப்பு தொடரும்.....

Sunday, November 14, 2010

ராகா குறுஞ்செய்தி இதழ் பதிவுகள்(நவம்பர்)

+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 700
13 -11 -2010
*
தானாக நிரம்பி
வழிகிற நீரில்
நடத்துகிறோம் வாழ்க்கை
அதற்கும் வழியில்லையெனில்
தள்ளுகிறோம் நாக்கை
நனைக்கவாவது நீர் தேவையென
வேண்டுகையில்
வாய் திறக்கின்றன
அரசும் ஆகாயமும்
எங்கள் உயிரை குடிக்க
-ஆங்கரை பைரவி
9842633785
*************
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 701
14 -11 -2010
*
குழந்தை இல்லாதவளின்
இரவை
மேலும் இருட்டாக்குகிறது
நடுநிசி பூனைகளின்
குழந்தை குரல்.
-திரைப்பட பாடலாசிரியர்
பழனி பாரதி
*********
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 702
15 -11 -2010
*

கலைத்துப்போட்டிருந்த
கூடு பார்த்தும் தளராமல்
இன்னொரு கிளையில்
கட்டத்துவங்கியது
அதற்க்கான கூட்டை
என் மனப்பறவை.
-கவிஞர்.ரிஷபன் திருச்சி
9442502781
 **  **  **
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 703
16  -11 -2010
*

எல்லோரும் வியக்கும்வண்ணம்
ஒரு சொல் எடுத்து வா..
அதுவரை
பேச்சோசை இல்லாத
அமைதி கடலில்
வாயை
நங்கூரம் இட்டுவை.
-கவித்துவன்
திருச்சி
7502545784
*********
+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=
நாள் : 706 
19  -11 -2010
*


அரும்புகளாய் வளர்ந்திருந்த
உன் மீதான
ஆசைகலேங்கும்
அள்ளித்தெளிக்கிறாய்
விஷம் கலந்த வார்த்தைகளை, 
இன்னும் வீரியப்படுகிறது
என் ஆசைகள் 
உன் வெறுப்புகளை 
விழுங்கியபடி. 
-பா.ஜெயகுமார்
அந்தியூர் 
9842163703 
***********
 +ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 707 
20  -11 -2010
*

கேட்பாரற்று கிடக்கிறது
கலப்பையும்
காளைமாடுகளின்
கழுத்து மணிகளும்,
தூரத்தில்
பெருத்த சத்தத்தோடு
உழுகின்றன
பெருந்தனவான்களின்
நாகரீக வரவின்
நவீன டிராக்டர்கள்.
-செண்பககாசி
சென்னை
************

 +ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 708
22 -11 -2010
*















மாந்தளிர்
பூவிதழ்
மயிலிறகு
கோகில கீதம்
குழலின் நாதம்
யாவும் இதமாற்று போனது
ஒரு மழலை முன்.



















-மு.வேலா
 9942474051
**************


 +ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 709

23 -11 -2010
*

அந்த மூன்றாம்பால் வீதியில்
பிசுபிசுத்தபடி கிடக்கும்
நம் பேச்சுக்களின்
மிச்சத்தை
கொறித்தபடி செல்கிறது
பிரபஞ்சத்தின்
இரவுகளும் பகல்களும்.
-சி.கலைவாணி
வேலூர்
***************


+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 710
24 -11 -2010
*















நெருக்கமானவர்களுடனான
நிழற்படத்தில்
நின்றுகொண்டே இருப்பேன்
அமர்ந்திருப்பவரின்  தோளில்
என் கை

அழுத்தமாகவே பதிந்திருக்கிறது 
என் ப்ரியத்தைப்போலவே. 


















-அருணாச்சல சிவா 
சென்னை 
8124177898 
************


+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 712
26 -11 -2010
*



















 என் தேசத்தில்
நீ தான் ராணி
என் திசைகளில்
நீ தான் கிழக்கு
என் பாதைகளில்
நீ தான் வெளிச்சம்
என் பள்ளக்கினில்
நீ தான் எஜமான்
என் உடம்பினில்
நீ தான் பாதி
என் உயிரே
நீ தான் ஜோதி.



















-ராசை. கண்மணி ராசா
7502522026
****************


 +ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 713
27 -11 -2010
*
ஏரியின் இடுப்பில்
கிச்சு கிச்சு மூட்டியபடி
தாவித் தாவி செல்லும்
தவளைக்கல்லோடு பயணிக்கிறது
ஓய்ந்த ஒரு பொழுதில்
அது தற்கொலை
செய்துகொள்ளும்
என்பதறியாமல்
கரையேற தவிக்கும் மனசு.
-சங்கரபாண்டியன்
வடுகப்பட்டி
9952895010
************


+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 715
29 -11 -2010
*

வெங்காயம் நறுக்குகையில்
அம்மாவின் கண்களில்
வராத கண்ணீர்
பெருக்கெடுக்கிறது
அருகிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
என் கண்களில்,
வெளிப்படவிருக்கும் கண்ணீரை
அடக்கும் கலை
அம்மாவுக்கே
அத்துபடி போலும்.



















-பா.தியாகு
கோவை
8012330511
**************




+ராகா+
=குறுஞ்செய்தி இதழ்=

நாள் : 716
30 -11 -2010
*















குளிர்பதன பெட்டியிலிருந்து
எடுக்கப்பட்ட 
பனிக்கட்டிகள் கூட
திசைக்கொன்றாய்
பாதைகள் அமைத்தபடி
பயணிக்கிறது
நீர்த்தாரைகளாய் மாற்றம் கொண்டு,
நான்
அப்படியே தான் இருக்கிறேன் 
"என் நினைவுகளை அழித்து விடு " 
என்று
எனை நீங்கிச்சென்ற இடத்திலேயே.









-க.அண்ணாமலை
மாமண்டூர்
9486424886
**********
(நவம்பர்)
ராகா குறுஞ்செய்தி இதழ்  பதிவுகள் தொடரும்.......

Monday, November 8, 2010

கவிதைகள்

கவிதைகள் திருவிழாவில்

உன்னை

பார்க்க நேரும்போதெல்லாம்

அறிவிப்பு அறையோரம்

ஒதுங்குகிறேன்

தொலையப்போகும் என்னை

கண்டறிய உதவச்சொல்லி...

-அ.ராஜீவ்காந்தி