எனக்கு வாழ்க்கை தந்தது விளையாட்டுதான்' என்கிறார் கைப்பந்து வீராங்கனை கலைவாணி. மாநில அணியில் இடம்பெற்றுள்ள இவர் எதிர்கொண்ட சவால்கள் பல. விளையாட்டுக்காக பொறியியல் படிப்பை உதறியவர் கலைவாணி. கைப்பந்து என்றால் கலைவாணி என்று பெயர் சொல்லும் அளவுக்கு முன்னேறுவேன் என்று உறுதியோடு கூறும் அவருடன் ஒரு சந்திப்பு... கல்லூரியில் படிக்கும் அவர் புத்தகமும் கையுமாக இருப்பார் என்று பார்த்தால் ஜிம்மில்தான் கலைவாணியை சந்திக்க முடிந்தது. வாழ்வில் விளையாட்டுக்கு முதலிடம் அளிக்கும் அவர் படிப்பைவிட பயிற்சிதான் முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.
கலைவாணி ஈரோடு மாவட்டம் கோபி பி.கே.ஆர்.மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கிறார். கல்லூரி உடற்பயிற்சி கூடத்தில், வியர்வை துளிகள் முகத்தில் வழிந்தாலும் பயிற்சியில் கவனமாக இருந்தார் கலைவாணி. கண்கள் நிறைய கனவு, சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இருப்பதை அவர் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிந்தது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கலைவாணி. ஈரோட்டில் படித்து வருகிறார். சிறுவயதிலேயே விளையாட்டு மீது அவருக்கு தீராத ஆர்வம். திருவண்ணாமலை அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படிக்கும்போது, கைப்பந்து அணியில் சேர்ந்தார். ஆசிரியை தமிழ்ச்செல்வி கொடுத்த ஊக்கம் மற்றும் கைப்பந்து கோர்ட்டுக்குள் ஏற்பட்ட ஒரு தாக்கம் அவரை சிறந்த வீராங்கனையாக மாற்றியது என்கிறார்.
எளிய குடும்பத்தில் பிறந்த அவரை வறுமை ஒருபுறம் வாட்டியது. தந்தை பி.ஆறுமுகம். தாயார் பங்காரு. சிறிய இட்லி கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்தி வந்தார்கள். இதற்கிடையே கலைவாணி 8-ம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூட அணி மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு பெற்றது.
போட்டியில் கலைவாணியின் சாதுரியமான ஆட்டம் மாவட்ட அளவில் கைப்பந்து வீரர்-வீராங்கனைகளின் கவனத்தை ஈர்த்தது. அவருடைய விளையாட்டுத் திறமையை பார்த்த அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அதிகாரி தர்மராஜ் தனிக்கவனம் எடுத்து கலைவாணிக்கு பயிற்சி அளித்தார். இதனால் 9-ம் வகுப்பில் மாநில கைப்பந்து அணிக்குத் தேர்வு பெற்றார்.
விளையாட்டால் அடையாளம் காணப்பட்ட கலைவாணிக்கு அதுவே படிப்பிலும் ஊக்கம் தருவதாக அமைந்துவிட்டது. விளையாட்டோடு படிப்பிலும் கவனம் செலுத்தி பிளஸ்-2 படிப்பை முடித்தார். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த அவர் சென்னையில் ஒரு பிரபலமான தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதை கலைவாணியே கூறுகிறார்...
"விளையாட்டால்தான் நான் வாழ்க்கை பெற்றேன். விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில்தான் எனக்கு பொறியியல் படிப்புக்கான 'சீட்' கிடைத்தது. கல்வி, தங்கும் இடம் அனைத்தும் இலவசம். சந்தோஷமாகத்தான் இருந்தது. 2 மாதங்கள் வகுப்புக்கு சென்றேன்.
ஒருநாள் என்னை அழைத்த கல்லூரி நிர்வாகத்தினர், "விளையாட்டு இட ஒதுக்கீட்டில் உனக்கு இடம் கிடைத்திருந்தாலும், இனிமேல் நீ விளையாட வேண்டாம். படிப்பில் கவனம் செலுத்து" என்று கட்டுப்பாடு விதித்தார்கள். நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
படிப்பு முக்கியம்தான். ஆனால் கைப்பந்து வீராங்கனையாகி மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் என் கனவு. அதற்கு அவர்கள் கட்டுப்பாடு விதித்தபோது எனக்கு விழிகளில் கண்ணீர் திரண்டது.
என்னுடைய பயிற்சியாளர் ஆனந்தகுமாரை தொடர்பு கொண்டு, தகவல் சொன்னேன். அவர்தான் என்னை கோபி பி.கே.ஆர். கல்லூரியில் சேர்த்து விட்டார். கல்லூரி தாளாளர் வெங்கடாசலம், முதல்வர் ஜெகதா லட்சுமணன், உடற்கல்வி பேராசிரியை சாவித்திரி ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் நான் இன்றும் விளையாட்டில் புத்துயிருடன் ஆடி வருகிறேன்" என்றார்.
கலைவாணி இதுவரை 7 தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 2 போட்டிகளில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. அவர் வாழ்வில் நடந்த இன்னொரு மாற்றத்தை அவர் விவரிக்கிறார்...
"2003-ம் ஆண்டு 16-வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஊரக விளையாட்டு போட்டியில் முதன் முதலாக தமிழக அணிக்காக விளையாடினேன். போட்டியின்போது நான் அட்டாக் வீராங்கனையாக களம் இறங்கினேன். ஆனால், அன்றைக்கு அணி இருந்த நிலையில் திடீரென்று என்னை லிப்ரோ பகுதியில் விளையாட கூறினார்கள்.
லிப்ரோ என்றால், எதிர் அணியில் இருந்து அட்டாக் வீராங்கனை 'கட்' அடித்துவிடும் பந்துகளை லாவகமாக தரையில் விழாமல் எடுத்து விடும் களமாகும். எனக்கு அந்த லிப்ரோ பகுதி புதிது. ஆனால், மன உறுதியுடன் விளையாடினேன். அந்தப் போட்டியில் ஜெயித்தோம். எங்கள் அணி 3-ம் இடம் பிடித்தது. போட்டி முடிந்ததும் சக வீராங்கனைகள் மட்டுமின்றி, பயிற்சியாளர்களும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். அன்றுமுதல் நான் லிப்ரோ பகுதியில் விளையாடி வருகிறேன்.
கைப்பந்து வீராங்கனைகள் ஒவ்வொருவரும் லிப்ரோ என்றால் அது கலைவாணி என்று கூறும் அளவுக்கு என்னை தயார்படுத்திக்கொள்வதே என் கனவு" என்கிறார் கலைவாணி.
வறுமை விதித்த தடையால் 'நான் மட்டும் விளையாட்டிற்கு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியாது' என்று கூறும் கலைவாணி விளையாட்டை மிக உயர்வாக மதிக்கிறார்.
"விளையாட்டு இப்போது எனக்கு தைரியத்தை கொடுத்து இருக்கிறது. வாழ்க்கையின் மீது இருந்த பயத்தை போக்கி இருக்கிறது. கைப்பந்து விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதே எனது லட்சியமாக மாறி இருக்கிறது" என்று கூறும் கலைவாணி எம்.சி.ஏ. படித்து நல்ல வேலையில் சேருவேன் என்கிறார்.
உலக அளவில் கைப்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் நம் நாட்டில் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம் இல்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, கைப்பந்து விளையாட்டை பொறுத்தவரை, அதிகம்பேர் ரசிக்கும் விளையாட்டாக இருந்தாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத விளையாட்டாக இருக்கிறது.
எனவே அரசு எங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கைப்பந்து என்பது குழு விளையாட்டு. இதில் ஒட்டுமொத்தமாக அனைவரும் இணைந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணி வெற்றி பெறும். ஒரு அணி தோல்வி அடைந்தால், அதில் சிறப்பாக விளையாடும் வீராங்கனையும் வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே கைப்பந்து வீரர்-வீராங்கனைகளுக்கு தனித்தனியாக அவர்களின் திறமையை கணித்து வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்தார் கலைவாணி
சாதனையாளர்களின் அணிவகுப்பு தொடரும்.....
No comments:
Post a Comment