Thursday, December 2, 2010

நாட்டுப்புறம்

பழமொழியின் விளக்கம்
முன்னுரை
இயற்கைக் கவிஞர்களாகிய பாமர மக்கள் தங்கள் அனுபவத்தைக் கற்பனைக் களஞ்சியமாகக் கொண்டு பாடப்படுபவை நாட்டுப்புறப் பாடல்கள் ஆகும். இன்பத்தைப் பாட்டால் பகிர்ந்து கொள்ளவும் சோர்வை போக்கிக் கொள்ளவும் வாய்மொழியாகத் தாலாட்டு, ஒப்பாரி, விடுகதை, விளையாட்டு பிசி, பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். தொல்காப்பியர் வாய்மொழி. பண்ணத்தி என்று சுட்டுவது நாட்டுப்புறப் பாடல்களே எனலாம். மக்கள் தங்கள் வாழ்வில் பிசி, பழமொழிகளைப் பயன்படுத்துகின்றனர். பழமொழி என்பது மக்களின் பண்பாட்டினை ஒட்டிய வாழ்வியல் முறைகளில் தொன்மையான வாக்கிய முதிர்வு பெற்ற சொற்களைப் பழமொழி என்பர். பழமொழியை மலையாளத்தில் "பழஞ்சொல்" என்றும் தெலுங்கில் "நாதுடி" என்றும் கன்னடத்தில் "நாண்ணுடி" என்று ஆங்கிலத்தில் Proverb என்றும் வழங்கப்படுகின்றது. பழமொழிகள் மூலம் மக்கள் வாழ்க்கை முறையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சாலை இளந்திரையன் பழமொழிகளைப் பற்றி "பழமொழிகளும் ஏனைய பாமரர் இலக்கியங்களும் அவைகளைப் படைத்து வழங்கி வந்த மக்களின் கருத்தோட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளன. எனவே மக்களின் சமுதாய இயல், அரசு இயல், நீதிஇயல், மற்றும் மத இயல், கோட்பாடுகளைப் பற்றிய ஆய்வுக்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு இல்லை". (சமுதாய நோக்கில் பழமொழிகள்: 10) என்று குறிப்பிடுகின்றார். எனவே மக்களின் சமுகம், நீதி, அரசு, மதம் சார்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பழமொழிகள் உறுதுணை புரிகின்றன என்பதை அறிய முடிகின்றது.

பழமொழியின் தோற்றம்

மனிதன் என்று சிந்தித்துப் பேசத் தொடங்கினானோ அன்றே பழமொழிகள் தோன்றி இருக்க வேண்டும். ஏனெனில் மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒன்றி இயைந்து இருப்பதால் இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்பதை அறுதியிட இயலாததாக இருக்கிறது.
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் சங்க இலக்கியத்தில் பழமொழிகளைக் குறித்த செய்திகள் வருகின்றன, அவற்றைக் குறிக்க பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. என்பதால் அதற்கு முன்பே பழமொழிகள் சிறப்புப்பெற்று இருந்திருக்க வேண்டும். நீதி நூல்களில் "பழமொழி நானூறு" என்ற நூலும் வெண்பாவால் இயற்றப்பட்டிருப்பது பழமொழிகளுக்குச் சிறப்பு சேர்ப்பதாக இருக்கின்றது. பின்னாளில் எழுந்த, தண்டலையார் சதகம், கோவிந்த சதகம், பழமொழி போதனை, பழமொழி போதம், பழமொழித் தாலாட்டு என்ற இலக்கியங்கள் எல்லாம் பழமொழியைப் பயன்படுத்தியும் பழமொழியின் பெயரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பழமொழிகளின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ச.சிவகாமி பழமொழிகள் பழங்காலத்தில் இருந்தே மக்களிடையே வழங்கி வருகின்றன. காலந்தோறும் அவற்றிற்கிடையே மாற்றங்கள் சூழல்களுக்கேற்ப ஏற்படுவதுடன் புதியனவும் தோன்றுகின்றன. வாழ்க்கை ஒழுங்கிற்கு எழுதாச் சட்டங்களாக நின்று வழங்கி வந்த பழமொழிகள் இலக்கிய உருவாக்கக் காலத்திற்கு முன்பே தோன்றின. (பன்முகக் பார்வையில் பழமொழிகள் ப.12) என்று உரைக்கின்றார். அதனால் பழமொழிகள் ஒவ்வொரு காலத்திலும் தோற்றம் பெற்று மக்களின் வாழ்க்கையோடு இயைந்தும் சிறந்தது நிலைத்தும் அல்லாதது மறைந்தும் போய் விடுகின்றன எனலாம். மனித வாழ்வின் ஒட்டு மொத்த பயன்பாட்டில் நல்லவற்றையும் தீயவற்றையும் சுட்ட வருவன பழமொழிகள். இவை அறிவின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் பண்பின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் தொழிலின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் வாழ்வியல் முறைகளின் அடியாக நிகழும் நிகழ்ச்சிகளையும் கொண்டே அந்தந்த நிகழ்ச்சிகளில் வல்லார் அந்தந்த நிகழ்ச்சிகளைச் செய்ய வேண்டிச் சிலபல பழமொழிக€ளை தோற்றுவித்தனர். அவையே பழமொழிகளாயின (பழமொழியும் பண்பாடும் ப.5) என்று செந்துறை முத்து குறிப்பிடுகின்றார்.

பழமொழி - இலக்கணம்

பழமொழிக்குத் தொன்மையான ஒரு வரையறயை முதன் முதலில் வகுத்தவர் தொல்காப்பியர்: பழமொழியை "முது மொழி" என்று சுட்டியிருக்கின்றார். நுண்மை, சுருக்கம் ஒளி உடைமை, எளிமை, குறித்த பொருளை முடித்தல், ஏது நுதலுதல் ஆகிய இலக்கணம் வாய்க்கப் பெற்றுக் குறிப்பிட்ட பொருளைக் காரணத்துடன் உணர்த்துவது பழமொழி. இதனை,
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப. (தொல்- 177)
என்று பழமொழியின் அமைப்பை விளக்குகிறார். தமிழ்க் கோட்பாடு வரிசை 3 பழமொழி எப்படி இருக்க வேண்டும் என்பதை.
1. எளியோர் நாவில் வழங்கத்தக்கதாய் இருத்தல் வேண்டும்.
2. எதுகையிலோ மோனையிலோ அல்லது பிற வகையிலோ ஒரு வகை ஓசை நயம் இருத்தல் வேண்டும்.
3. கருத்தை நேரிடையாகக் குறிப்பிட வேண்டும்.
4. பழமொழி கூறும் கருத்து பலகாலும் அனுபவப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
5. உவமைகள் கண்ணாற் காணத்தக்கனவாக இருத்தல் வேண்டும்.
7. சொற்களை எடுத்து விட்டு வேறு சொல்லைப் பெய்து கொள்ளத் தக்க நெகிழ்ச்சி வேண்டும். (த.கோ.3.11-12)
என்று குறிப்பிடுகின்றது. அனுபவப்பட்ட மொழியாக இருப்பதோடு எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக கருத்தை உணர்த்துவன பழமொழிகள் என்பதை அறியமுடிகின்றது. நன்னூல் நூலுக்குரிய பத்து அழகும் நூற்பாவுக்கு வகுத்துள்ள இலக்கணமும் பழமொழியின் இலக்கணத்திற்கு பொருந்துவனவாய் உள்ளன என்று வ.பெருமாள் குறிப்பிடுகின்றார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

"நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்
ஓசையுடைமை ஆழமுடைத்தாதல்
முறையின் வைப்பே உலகம் மலையாமை
விழுமியது பயத்தல் விளங்குதா தெடுத்த
தாகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே" (நன்-13)
சுருக்கமும், விளங்க வைத்தலும் நன்மொழி புணர்த்தலும் ஆழ்ந்த கருத்து உறைத்தலும் பழமொழிக்கும் உண்டு என்பதால் இவை பொருந்துகின்றது எனலாம். பழமொழிகளின் அமைப்பினை "ஒட்டு அல்லது உருவக அணியேற்று நின்று தொடர்புடைய கருத்தை உடனடியாக நெஞ்சில் எழச் செய்யும் முழுமையான வாக்கியமே பழமொழி என்பதோடு பழமொழி முறிவு பட்ட தொடராக இல்லாமல் முழுமையான வாக்கியமாகவே அமைய வேண்டும். முற்றுப் பெற்ற வாக்கியமாக இருத்தல் வேண்டும் என்றும். எந்தப் பழமொழியும் உரையாடல் முறையில் அமைவதில்லை. சுருக்கமும் ஒளியுடைமையும் பழமொழியின் முக்கியப் பண்புகள். எதுகை, மோனை, முரண், ஓசை நயம், வினா முதலிய உத்திகளைப் பழமொழி ஏற்றுவரும். கேள்வியாகப் பழமொழியை அமைப்பதே தமிழில் காணப்படும் பரவலான கருத்து. உவமைத் தொடர்களே சில நேரங்களில் பழமொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று (சமுதாய நோக்கில் பழமொழிகள்:15) சாலை இளந்திரையன் குறிப்பிடுகின்றார்
இதனால் சிறந்த கருத்தினைக் கொண்டதாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக, நீதியை உரைப்பதாக, எதுகை, மோனை பெற்று சுருங்கிய வடிவில் வருவன பழமொழிகள் எனலாம்.

பழமொழியின் வேறு பெயர்கள்

பழமொழி என்னும் சொல்லுக்கு இணைப்பொருண்மைக் கொண்ட சொற்களாக இலக்கியங்களும் நிகண்டுகளும் அறிஞர்களும் பல்வேறு பெயர்களைச் சுட்டிருக்கின்றனர்.
1. ஏது நுதலிய முதுமொழி என்ப-தொல் 177
2. எவ்வஞ் சூழாது விலங்கிய கொள்கைக் (காலை யன்ன சீர்சால் வாழ்மொழி (பதி,பா,21)
3. நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழியின் (அக 101)
4. பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி (அக.66)
5. மொழிமை மூதுறை முன்சொற் பழஞ்சோல முதுசொல் என்பர் பழமொழியுமாமே (பி.நி.22)
6. மூதுரைப் பெருங்கதைகளும் மொழிவார் - (கம் சூர் 102)
8. புலிதானே புறத்து அக குட்டி போட்டது என்ற
9. ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ (கம்.ஆர.102)
10. திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற பழமொழி யோதியே யுணர்ந்து (திருப்புகழ்)
11. வேத முதல்வர் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ (சில ஊர் 46.49)
என்று இலக்கியங்கள் பழமொழியைச் சுட்டுகின்றன, வ.பெருமாள் பழமொழியை 33 சொற்களால் குறிப்பிடுகின்றார்.
1. பழமொழி, 2. தொன்னெறி மொழி, 3. முதுமொழி, 4. முதுசொல், 5. தொன்றுபடுகிளவி, 6. தொன்றுபடு பழமொழி, 7. வாய்மை, 8. அறம், 9. நெடுமொழி, 10. பல்லவையோர் சொல். 11. பண்டைப்பழமொழி, 12. சொலவு, 13. மூதுரை, 14. பழஞ்சொல், 15. மூத்தோர் சொல், 16. வழக்கு, 17. உரை, 18. பழையநெறியினவாய்வரும்சொல், 19. பழவார்த்தை, 20. உலகமொழி, 21. உபகதை, 22. சுலோகம், 23. சொலவடை, 24. வசனம், 25. எழுதாஇலக்கியம், 26. வாய்மொழி இலக்கியம், 27. எழுதாக் கிளவி, 28. கேள்வி, 29. சுருதி, 30. நீதிமொழி, 31. முதுமை, 32. மொழிமை, 33. முன்சொல்
என்று குறிப்பிடுகின்றார். இதனால் பழமொழியைச் சுட்ட பல பெயர்கள் வழங்கப்பட்டு வந்து இருப்பதே அறிய முடிகின்றது
பழமொழியின் தன்மை
வாழ்க்கை அனுபவமே பழமொழிகள். அவை என்றும் பொய்ப்பதில்லை, பழமொழியின் பொதுத்தன்மைகள் குறித்து அறிஞர்கள்,
1. ஆயிரம் நூற்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும் - லாவேட்டர்
2. பழமொழிகள் இருட்டில் வழிகாட்டும் தீவர்த்தி - பாஸ்ளியல் பழமொழி
3. சிறந்த பொருளை சுருங்கிய முறையில் உள்ளத்தில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழியின் தன்மை-தாமஸ்கார் லைன் பழமொழி
4. வானம் இடிந்து விழுவதில்லை பழமொழி பொய்யவாதில்லை
5. பழமொழிக்கு உமியில்லை - இந்தியா
6. பால் புளிக்குமா? பழமொழி பொய்க்குமா? - அமெரிக்கா

என்று குறிப்பிடுவதால் பழமொழிகள் உண்மைகளை உரைப்பன என்பதை அறிய முடிகின்றது. பழமொழிகள் அனைத்திற்கும் பட்டறிவே அடிப்படையாக அமைகின்றது. அனுபவத்தின் குழந்தைகள் பழமொழிகள் என்று இங்கிலாந்தும் அனுபவத்தின் எதிரொலிகள் பழமொழிகள் என்று சுவிட்ஸர்லாந்து மொழியும் பழமொழியின் ஒருமித்த கருத்தாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
பழமொழிகளுக்குப் பொருள் விளக்கங்களையும் மக்கள் தம் அனுபவத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். பழமொழிகளைக் கூறுபவர் சூழலுக்கேற்ப பழமொழியைக் கேட்பவர் அச்சூழலை உணர்ந்து அதன் பொருளை அறிந்து கொள்கின்றனர். ஒரு மொழி பேசுபவரிடையே பல வட்டார வழக்கு மாறுபாடுகள் இருப்பதைப் போல் பழமொழிகளும் வழங்குவதில் வழக்கு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்றைச் சிறப்பித்து மொழியும் பழமொழிகளுக்கு ஏற்ப அதே போன்று பிறிதொரு பழமொழியும் தோன்றுகிறது. இதனால் எது முந்தியது எதைப் பார்த்து எது பிறக்கிறது என்று சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
பயன்படும் சூழல்
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டும் தான் பழமொழிகளைப் பயன்படுத்துவர் என்று குறிப்பிட இயலாது. எல்லாச் சூழ்நிலைகளிலும் பழமொழியைப் பயன்படுத்துவர். அறிவுரை வழங்கும் போது தன்னிலை உணர்த்தும் பொழுது மதிப்பீடு செய்யும் பொழுது, தவறு செய்வோரை ஏசும் பொழுதும் பழமொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. பழமொழிகள் பொருள் அடிப்படையிலும், தகுதி அடிப்படையிலும், சமுதாய அடிப்படையிலும், சமய அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும், நில அடிப்படையிலும், செயல் அடிப்படையிலும், அளவு அடிப்படையிலும் வகைப்படுத்தப்படுகின்றன.
பழமொழிகள் வாழ்க்கைப் பயன் பாட்டிற்கு உதவுவதால், நன்மைத் தீமைகளைச் சுட்டுவதால் நீதிக் களஞ்சியமாகத் திகழ்கின்றன. மக்கள் தம் அனுபவத்தை என்றைக்கு வெளிப்படுத்த விரும்பினார்களோ அன்றே பழமொழிகள் தோற்றம் பெற்றன. பழமொழிகள் சுருக்கம், எளிமை கருத்து விளக்கம், எதுகை, மோனை, ஓசை நயம், வினா ஆகிய தன்மைகளைக் கொண்டு எதன் உதவியும் இன்றி தன் கருத்து வளத்தைக் கொண்டே நிலை பெறுகின்றது. மக்கள் தம் சிச்கல்களுக்கும் பேச்சுக்கும் ஓர் அழகைத் தருவதால் பழமொழிகளைக் காத்து வருகின்றனர். பயன்பாட்டில் அதிகம் இடம் பெறாத பழமொழிகள் நாளடைவில் மறைந்தும் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் புதிய பழமொழிகள் தோன்றுகின்றன. காலத்திற்கும், பேச்சாளர்களும் தங்கள் கருத்து வளத்திற்குப் பழமொழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நன்றி
வேர்களைத் தேடி
கூடல்.காம்
*********************

கண்ணதாசன் கவிதைகளில் நாட்டுப்புறப்பாட்டின் தாக்கம்
..........................................................................................................................................


கண்ணதாசன் சங்க இலக்கியங்களையும் காப்பியங்களையும் ஆழ்ந்து பயின்று அவற்றின் சுவையில் திளைத்தவர் என்பதனை அவர்தம் கவிதைகளால் நன்கு அறியமுடிகிறது. இவ்வாறே ஏட்டுக்கு வராத கிராமத்து மக்களின் பழக்க வழக்கங்களைக் கூறும் வாய்மொழியை நேசித்துள்ளார். ஏட்டு இலக்கியத்தை நாட்டுப்புற மக்களுக்குக் கொண்டு சென்றவர் நாட்டுப்புற மக்களின் வாய்மொழி இலக்கியத்தை இலக்கியவாதிகளுக்குச் சொன்னவர். இவ்வாறு ஒரு புதிய மாற்றத்தை உண்டு செய்த பெருங்கவிஞராகவே விளங்கியவர் என்பதினை,
"பாவலரின் கவிதைக்கும்
பாமரனின் காதுக்கும்
பாலத்தைப் போட்டு வைத்தாய்
பண்டிதரின் முந்தியிலும்
பணக்காரர் தொந்தியிலும்
இருந்த தமிழ் மீட்டு வைத்தாய்"

கவிஞர் மு. மேத்தாவின் கூற்று மெய்ப்பிக்கும்.

தாலாட்டு:-

கவிஞரின் கவிதைகளில் நாட்டுப்புறக் பாடல்களுல் ஒன்றான தாலாட்டுப் பாடல்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. தாலாட்டுப் பாடல்கள் பெற்றோர் தவம், குழந்தை, அழகு, மாமன் சிர்வரிசை முதலியன குறிப்பிடத்தக்க சில கருத்துகளாகும் இவையின்றிக் காதல் பற்றியும் வீரம் பற்றியும் இயற்கை நிகழ்ச்சியான மழை பற்றியும், மதுவிலக்குப் பற்றியும் கலவரம் பற்றியும் தாலாட்டுப் பாடல்கள் கூறுகின்றன.
குழந்தையின் அழகு பற்றிய பாடல்:-
குழந்தையைத் தாலாட்டும் போது குழந்தையின் அழகினை வியந்து கூறும் தாலாட்டுப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. குழந்தையை முத்து என்றும் பவளம் என்றும் மணி என்றும் தாய் வியந்து பாராட்டும் பாடல்கள் பல காணப்படுகின்றன.
"முத்தத்தில் ஒரு முத்தோ முதிரவிளைந்த முத்தே
ஆணி பெருமுத்தோ ஐயாக்கள் ஆண்ட முத்தோ
முத்து முத்துக் கடலுகுள்ளே மூணாத்துப் பாய்ச்சலிலே
முக்குளித்து முத்தெடுக்கும் முத்துமகன் நித்திரையோ"

என்பது ஒன்று பாட்டினைக் கண்ணதாசன் தமதுதிரை இசைப் பாடலில்,
"ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய முத்து
எங்கள் ராசா கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு"

என்று வருணணைச் செய்திருக்கின்றார்.
ஒரு நாட்டுப்புறத் தாலாட்டுப் பாட்டில் பூ என்று குழந்தையின் முகத்தை வருணணை செய்கின்றாள் தாய் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூ வாக இருப்பதைக் கூறுகின்றார்
"கண்ணே கமலப்பூ கண்ணிரண்டும் தாமரைப்பூ
கண்மணியே ஏலப்பூ
சாதிரண்டும் பிச்சிப்பூ
மேனி மகிழம் பூ
மேற் புருவம் சண்பகப்பூ"

என்று தன் குழந்தையைப் பல்வேறு பூக்களாக வருணித்துத் தாலாட்டுகின்றாள். இப்பாடலினை அடியொற்றி
"சின்னச் சின்னக் கண்ணணுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டு தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா"

என்னும் பாடலைக் கவிஞர் பாடியுள்ளார்.
மாமன் சிர் தாலாட்டில்
தாலாட்டுப் பாடல்களின் மாமனை மையப்படுத்தி மாமனுடைய சமூகப் பொறுப்புகளை பற்றிக் கூறும் பாடல்களை ஒரு தனிவகையாக பிரிக்கலாம். அந்த அளவிற்கு மாமன் பற்றி தாலாட்டுப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. மாமன் என்பவர் செல்வராகவோ ஏழையாகவோ எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவர் சடங்கு வழியில் நின்று நிறைவேற்றும் பொறுப்புகள் மாறாதவகைளாக உள்ளன. சகோதரியின் குழந்தைக்கு மாமன் செய்யும் சிர் பற்றி
"தங்கத்தாலே தாலி என் கண்ணே
உனக்குத் தருவாரோ உன் மாமன்
பொன்னாலே மங்கலமாம் - என் கண்ணே
உனக்குப் போடுவார் உன் மாமன்"

வறுமை உணர்த்தும் தாலாட்டு:-
தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும் குழந்தையிடம் கூறுவதாகப் பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. வறுமையின் கொடுமையினையும் அதனால் ஏற்படும் மன அழுத்தத்தினையும் தாலாட்டுப் பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
"ஏழைக் குடிசையிலே
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே
எத்தனையோ சிமாட்டி
ஏங்கித் தவங்கிடக்க
என் வயிறு தேடி
ஏன் பிறந்தாய் செல்வமுத்தே"

என்பது தான் வந்த நாட்டுப்புறப் பாடல் இப்பாட்டினை கண்ணதாசன் தனது கவிதையில்
"ஏன் பிறந்தாய் மகனே - ஏன் பிறந்தாயோ
இல்லையொரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே"

என்று வறுமையினை படம்பிடித்துக் காட்டுகின்றார். வறுமையோடு தத்துவத்தையும் கூறுகின்ற கவிஞர். பிறந்த மகனை ஏன் பிறந்தாய் என்று கூறுமளவுக்கு மனம் வெறுப்பதற்குக் காரணமான வறுமை காட்டுகின்றார்.
பணம் இருக்கும் மனிதனுக்கு உலகம் எல்லாம் சொந்தம். பணமில்லா மனிதனுக்குச் சொந்தம் எல்லாம் துன்பம் என்பார் கண்ணதாசன். இக்கருத்தினை வலியுறுத்தும் முகமாக ஒரு தாலாட்டுப் பாடல்.
"கண்ணுக்கு இனியவளே கற்கண்டுச் சொல்லழகா
மாமனார் வந்திடுவார் மார்மேலே சிராட்ட
பொன்னா சைக்குடைமாமன் புறப்பட்டு வந்திடுவான்
பாட்டியார் வந்திடுவார் அடுக்களைச் சோறூட்ட
எல்லோரும் வந்திடுவார் ஆன பணம் உண்டானால்
உன்னைப் போல் செல்வனை நான் உலகெங்கும் கண்டதில்லை
என்னைப் போல் ஏழையை நீ எங்கனாச்சும் கண்டதுண்டா"

இப்பாடலின் தாக்கமாக,
செல்வர்கள் வீட்டில் சிராட்டும் பிள்ளைக்கு
பொன் வண்ணக் கிண்ணத்தில பால்கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவிரி நீராட்டு
கண்ணுறங்கு கண்ணுறங்கு"

என்ற கண்ணதாசன் தனது கவிதையில் ஏழைக்கு பிறந்த குழந்தை செல்வ செல்வாக்கு இல்லை என்பதைக் குறிப்பிடுகின்றார்.

காதற் பாடல்கள்:-
நாட்டுப்புறப் பாடல்களில் காதற் பற்றியப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றது. காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்ற பதிப்பாகவே இருக்கின்றன. அந்த அளவுக்கு மனதை கவர்ந்திழுக்கும் கருத்துச் செறிவும் உணர்ச்சியும் வெளிப்படுகின்றன.
வட்ட வட்டப் பாறையிலே
வரகரிசி தீட்டையிலே
ஆர் கொடுத்த சாயச்சிலை
ஆல வட்டம் போடுதடி

என்ற தெம்மாங்குப் பாட்டினை மனதில் நிலை நிறுத்திய கண்ணதாசன் தனது பாடலில்
வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிற்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி"

என்று தமது கவிதையில் நாட்டுப்புறப்பாட்டின் தாக்கத்தினை அறியலாம்.
காதலரின் மேன்மையை வியந்து வருணித்துக் காதலி பாடும் நாட்டுப்புறப் பாடல் ஒன்றில்
"ஆல மரத்துக்கிளி
அசாரம் பேசுங்கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் இந்த வழி"

இவ்வாறு கூறுகின்றாள்.
இப்பாடலின் தாக்கம் கண்ணதாசனுக்கு மனதில் நிலைப் பெற்றதனால் அதனை சென்றதும் கூற்றாக,
"பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்துப் பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு

என்று திரைக்குத் தகுந்தாற்போல பாட்டு இயற்றியுள்ளார் கவிஞர்.
ஒப்பாரிப் பாடல் தாக்கம்:-
ஒருவர் இறந்தபின்பு அவரின் இயல்புகளைக் கூறி அழுதல் ஒப்பாரி ஆகும். ஒப்பாரி என்பது இறங்கற்பா, கையறுநிலைப் பாடல் போன்றப் பெயர்களில் அழைக்கப்படும்.
"தங்க லைட் டெரியும்
தனிக்காந்தம் நிண்ணெரியும் - இப்போ
தங்க லைட்டுமில்லை - எனக்கு
தனிகாந்தம் பக்கமில்லை
பொன்னா பகுத்திருந்தா - எனக்கு
பொன்னு லைட்டெரியும்
புதுக் காந்தம் நின்னெரியும் - இப்ப
பொன்னு லைட்டுமில்லே
புதுக் காந்தம் பக்கமில்லை"

இப்பாடலொடு திரையிசைப் பாடல் ஒப்பிட்டு நோக்க உகந்ததாக அமைந்துள்ளது.
"அன்றோரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே"

என்று குறிப்பிடுவார். இப்பாடலிலும் வருத்தமே மிகுந்திருக்கின்றது.
கண்ணதாசன் பாடல்களில் நாட்டுப்புறப் பாடல்களுள் ஒன்றான தாலாட்டில் குழந்தையின் அழகு மாமன்சிர், வறுமையின் நிலை போன்றவைகளும் காதற் பாட்டு, ஒப்பாரிப்பாட்டு போன்ற செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. நாட்டுப் புறப்பாட்டின் தாக்கம் மிகுதியாக இடம் பெற்றுள்ளது.

நன்றி: வேர்களைத்தேடி

***************************
***************************

வட்டார வழக்கும் எழுத்தாளர்களும்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



மொழியை மக்கள் உருமாற்றம் செய்கிறார்கள். இவ்வுலகின் பெரிய அறிஞர்கள் அவற்றை வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறார்கள். மக்களின் மொழிப் பிரயோகத்திற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.
- ழாக் ப்ரெவர்
ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட கால வாழ்க்கை முறையை ஆவணமாக, இலக்கியமாக, வரலாறாக, கலையாக உருவாக்குபவன் எழுத்தாளன். மொழியியல் சார்ந்த விதிமுறைகளை, கொள்கைகளை, கோட்பாடுகளை, வரையறைகளை, அளவுகோல்களை அவன் உருவாக்குவதில்லை என்றாலும் இவை அனைத்தும் உருவாவதற்கான காரணிகளை உருவாக்குவதில் எழுத்தாளனின் பங்கு மிக முக்கியமானது.
மொழி குறித்து, அதன் கூறுகள், அதன் பன்முகத் தன்மை, அதன் பயன்பாட்டுப் பரப்பு குறித்துப் பேசுவதற்கு நுணுக்கமான பார்வை தேவை. காரணம், மாறிக்கொண்டேயிருப்பது, அதே நேரத்தில் வளர்ந்து கொண்டேயிருப்பது மொழி. மொழி தனித்து இயங்கக் கூடிய ஒன்றல்ல. அது குறிப்பிட்ட இனக்குழுவின் வாழ்க்கைமுறை சார்ந்து, நிலம் சார்ந்து, கலைகள், தொழில்கள், கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து உருவாவது. இந்த மொத்தக் கூறுகளும் சேர்ந்ததுதான் மொழி. இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாது.
மொழி என்பது பேசுவதற்கானது, கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்கானது, புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாராம்சம். ஒரு வாழ்க்கைமுறைதான் மொழியை உருவாக்குகிறது. மொழி ஒருபோதும் ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்குவதில்லை.
ஒரு மொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அது ஒரு தனிமனித வாழ்க்கையை, ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. விரிந்த பொருளில் ஒரு படைப்பு குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு காலத்திய வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ள முடியும். அப்படி விவரிக்கிற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். சிறந்த படைப்பிலக்கியத்தின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கையை, வரலாற்றை அறிய முடியும். அப்படி அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழி.
தமிழ் மொழியை, அதன் கூறுகளை, அலகுகளை, பயன்பாட்டுப் பரப்பை, பரிமாணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது - எழுத்தாளன் என்ற வகையில் எனக்கு எளிதாக இல்லை. குறிப்பாக, தமிழ் மொழியின் வழக்குகளைப் புரிந்துகொள்வதில், தற்காலத் தமிழைக் கையாள்வதில், மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது எளிய காரியம் அல்ல. அதிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகள் கொஞ்சமல்ல. எனக்கு மட்டுமல்ல, மொழியைப் புரிந்துகொண்டு எழுதுகிற எழுத்தாளர்களுக்கு - மொழியில் சிக்கல்கள் பெருகியபடியே இருக்கின்றன - இருக்கும் என்பதுதான் உண்மை.
தமிழ் மொழியில் வட்டார வழக்குகள் குறித்த பேச்சு வெகு காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு, விவாதத்தில் பல படிநிலைகளைக் கடந்து செயல்பாட்டளவில் பல வரையறைகளுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நாம் இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறோம். அதிகப்படியான போக்குவரத்து வசதி, தொழிற்சாலைகள், நகரங்களை நோக்கிய குடிபெயர்வு, அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், உலகமயமாக்கம் என்று எல்லாமும் சேர்ந்து தமிழ் வாழ்க்கைமுறையை முற்றிலுமாகக் குலைத்துப் போட்டுவிட்ட நிலையில் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவது சற்று வேடிக்கையானதுதான். தற்போதைய தமிழ் வாழ்க்கைமுறையில் வட்டாரம் என்பதற்கும் வட்டார வழக்குகள் என்பதற்கும் அர்த்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
தமிழ் மொழி காலம் காலமாக ஏதாவது ஒரு வழியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டே வந்திருக்கிறது. போர்த் தொடுப்புகள், வடமொழி ஆக்கிரமிப்பு, சமஸ்கிருதத்தின் தாக்கம், மிஷனரிகளின் வருகை, பிரிட்டிஷ் நிர்வாக முறை, ஊடகங்களின் மொழி என்று நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் தாக்குதலில் தமிழ் மொழி இழந்ததும் அளப்பரிய பெற்றதும் அளப்பரியது.
உலகெங்கும் சிறுசிறு இனக்குழுக்கள் சர்வதேசக் கலாச்சார வன்முறையால், அச்சு, காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பால் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை வேகமாக இழந்துவருகின்றன. தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. பல நூற்றாண்டு காலக் கிராம ஒழுங்குகள், நீதி நியமங்கள், நடைமுறைகள், அமைப்புகள் ஊடகங்களால் கொந்தளிப்பை ஒத்த தாக்குதலுக்குட்பட்டு நிலைகுலைந்துள்ள நிலையில் நாம் வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிறோம்.
வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது இருக்க முடியாது. இல்லை. ஆனால் உயர் வழக்கு, புலவர் தமிழ், பாமரர் வழக்கு, சாதி வழக்கு, இழிசனர் வழக்கு, கொச்சைத் தமிழ் என்று பல ரகமாகக் காலம் காலமாகப் பிரித்து வைத்திருக்கிறோம். இப் பிரிவினை மொழி வளர்ச்சிக்கு உதவாது. உலகத்தில் இன்று செழுமையான மொழிகள் என்று சொல்லப்படும் எல்லா மொழிகளுமே ஒரு காலத்தில் வட்டார மொழிகளாக, பேச்சு மொழிகளாகத்தான் இருந்துள்ளன என்பது வரலாறு. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வட்டார வழக்குகள், பொதுப் பேச்சு வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். படைப்பு மொழி, தனது உயிர்ப்பைப் பேச்சு - வட்டார வழக்கிலிருந்துதான் பெறுகிறது.
தமிழ் மொழியில் கிராமப்புற, உழைக்கிற மக்களின் மொழியை "நீச பாஷை" என்று புறக்கணித்த நிலை இருந்துள்ளது. இதனால் மொழியின் செழுமையான ஒரு பகுதி தமிழ் மொழியில் சேராமலேயே போய்விட்டது. கிராமப்புற நிகழ்த்துக் கலைகளின் வழக்குகள், கதைகள், பாடல்கள், சடங்குகள், விளையாட்டுகள், விடு கதைகள், பழமொழிகள் போன்றவற்றோடு தொடர்புடைய பல வழக்குகளை இழந்துவிட்டு நிற்கிறது தற்காலத் தமிழ். வட்டார வழக்கு பொது வழக்காக, எழுத்து வழக்காக மாறும். அப்படி மாறும்போது மொழிக்குப் பெரிய பலம் சேரும். வட்டார வழக்கின் பலத்தை இன்னும் அறியாதவர்களாகவே நாம் இருக்கிறோம்.

இயல்பான தமிழில் எழுதுகிற மனோபாவம் நம்மிடம் இல்லை. மேடைப் பேச்சுத் தமிழையே எழுத்துத் தமிழாகப் பாவிக்கிற மனோபாவத்தைத் திராவிட இயக்கங்கள் வலுவாக வேர் ஊன்றச் செய்துவிட்டன. அந்த மனோபாவத்திலிருந்து தமிழர்கள் இன்னும் மீளவே இல்லை. மொழி என்பது ஒரு இனக் குழுவின் அடையாளம். நாம் நம் அடையாளத்தை, அதற்குரிய நிஜமான பொருளில் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, அதை வேகமாக இழந்துவருகிறோம் என்பதுகூட நமக்கு உறைக்கவில்லை.
குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் பயன்படுத்தும் மொழியில் சிலபல வழக்குகள் பிற நிலப்பரப்பிற்குள் வாழும் மக்கள் அறியாத வழக்குகளாக இருப்பவற்றைக் குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழக்குச் சொற்கள் என்று வரையறை செய்யலாம். இப்படிப் பல நிலப்பகுதிக்குள் தனித்தனியாக உச்சரிக்கப்படுகிற வழக்குகளையே அந்தந்த நிலப்பகுதிக்குரிய வழக்குச் சொற்கள் என்று வகைப்படுத்தலாம். இந்த வரையறை ஒருபோதும் முழுமையானதாக இருக்க முடியாது. காரணம். நிலைத்த, நீடித்த சொல் வழக்கு என்று எந்த நிலப்பகுதியிலும் இருக்காது இருக்கவும் முடியாது. மொழி காலந்தோறும் மாறக்கூடியதாக இருக்கிறது. மாறக்கூடிய, மாற்றம் கொள்ளக்கூடியதாக இருக்கிற நிலையில் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் நின்றுதான் வரையறுக்க முடியும்.
கிராமத்தையும் விவசாயத்தையுமே அடிப்படையாகக் கொண்ட நாட்டில் இவற்றை மையப்படுத்தித்தான் இலக்கியங்கள் உருவாகியிருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருக்குமாயின் பெருமளவில் கிராம வாழ்க்கையும் மொழியும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருக்கும். அது தமிழ் மண்ணில் காலம் கடந்துதான் நடந்தது. அதுகூட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் எழுத வந்த பிறகுதான் நிகழ்ந்தது. அதுவும் 1980க்குப் பிறகு. இலக்கியத்தில் கிராமப்புற வாழ்வையும் மொழியையும் அதன் தன்மை மாறாமல் ஓரளவு பதிவுசெய்தவர்கள் என்று கி. ராஜநாராயணன், ஆர். சண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களை முன்னோடிகளாகச் சொல்லலாம். இவர்களுடைய பாணியைப் பின்பற்றி நிறையப் பேர் ஒரு இயக்கமாகவே செயல்பட்டார்கள். இவர்களும் சரி, இவர்களுக்குப் பினனால் வந்தவர்களும் சரி, வட்டார வழக்கின் ஜீவனை, அதன் பன்முகத் தன்மையை, பண்பாட்டுப் பரப்பைப் புரிந்துகொண்டு எழுதினார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் மனத்தில் பட்டதை எல்லாம் எழுதினார்கள் என்று சொல்லலாம்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒரு எழுத்தாளன் குறிப்பிட்ட வட்டார வழக்கின் ஜீவனைக் கண்டுபிடித்து எழுதுவான் என்று சொல்ல முடியாது. கிராமத்தில் பிறந்து வளர்ந்ததாலேயே ஒருவர் எழுதுவதெல்லாம் வட்டார வழக்கு எழுத்து இலக்கியம் என்று சொல்ல முடியாது. ஒருவர் அனுபவ பலத்தில் எழுதும்போது தன்னியல்பாக வட்டார வழக்குகள் சிறப்பாக அமைந்து ஒரு படைப்பை மதிப்பு மிக்கதாக மாற்றிவிடலாம். தன்னியல்பாக அமைகிற மொழி முக்கியமானது. அதோடு வாசிப்பின் மூலம் பெறுகிற மொழியும் முக்கியமானது. இரண்டு மொழியையும் மிகவும் சரியாகப் பயன்படுத்துவதற்கு எழுத்தாளனுக்குத் தேர்ந்த பயிற்சி வேண்டும். பிறரைக் காட்டிலும் எழுத்தாளனுக்கு மொழியில் தெளிவும் பயிற்சியும் இருக்க வேண்டியது அவசியம்.
ஒரு பாத்திரத்தை உருவாக்குவதுதான் எழுத்தாளனின் வேலை. அதற்குரிய மொழியைத் தீர்மானிப்பதில்லை. குறிப்பிட்ட பாத்திரம் அதற்கான மொழியைத்தானாகவே உருவாக்கிக்கொள்ளும். கவிதைக்கான மொழியும் புனைகதைக்கான மொழியும் வெவ் வேறானவை. சொற்களின் மீதும் மொழியின் மீதும் கவர்ச்சியும் மோகமும் கொண்டவனாக எழுத்தாளன் இருக்கக் கூடாது. மொழியைக் கவர்ச்சியுடன் பயன்படுத்துவதைவிட அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதே மொழி வளர்ச்சிக்கு உதவக்கூடியது. வடிவ ஒழுங்கும் மொழி நேர்த்தியும் மட்டுமே ஒரு படைப்பை மதிப்புமிக்கதாக மாற்றிவிட மாட்டா.
பொது எழுத்து மொழியைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுகிறவர்கள் கூடுதல் அக்கறையுடன் மொழியின் வலுவைப் புரிந்துகொண்டு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வட்டார வழக்குகள் நிறைந்த படைப்பைப் படிப்பதில் பிரச்சினைகள் இருக்கும் என்று நான் நம்பவில்லை. அப்படி இருப்பின் அவை சிறிய பிரச்சினைகளாகவே இருக்கும்.
தமிழில் வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி எழுதுபவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றனர். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து தொழில் சார்ந்து பெரு நகரங்களில் நிரந்தரமாகக் குடியேறி, கிராமத்தோடு தொடர்பு விட்டுப்போனவர்கள், தங்களுடைய ஞாபகங்களை மறுஉருவாக்கம் செய்து எழுதுகிறவர்கள். இவர்களுடைய வட்டார வழக்கு - எழுத்து மொழி, பொதுப் பேச்சுமொழி, அரைகுறை வட்டார வழக்கு மூன்றும் கலந்து - புது வழக்காக இருக்கிறது. மற்றொரு வகையினர் நிரந்தரமாக, குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை. கச்சிதத்தன்மை பற்றி அக்கறையில்லாமல், தங்களுக்குத் தெரிந்த வழக்குகளை எல்லாம் ஒரு மோஸ்தராகப் பதிவுசெய்கிறவர்கள். இந்த இரண்டு வகையினர் எழுதும் வட்டார வழக்குகளைக் கொண்டு வட்டார வழக்குகள் குறித்த எந்த அலகையும் உருவாக்க முடியாது. படைப்பு என்பது மொழி சம்பந்தப்பட்டது. ஒரு சிறந்த படைப்பில் மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள மட்டுமல்ல, உருவாக்கிக்கொள்ளவும் செய்கிறது.
வட்டாரம் சார்ந்த வழக்குகளைப் பயன்படுத்தும்போது சிக்கலில்லை என்று சொல்ல முடியாது. அய்யர் என்றால் பிராமணர் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. காலனியில் ஒரு அய்யர் இருக்கிறார், அவர் பிராமணர் அல்ல, வள்ளுவப் பண்டாரம். இவர்தான் காலனி வாழ் மக்களுக்குத் திருமணம், சாவு, ஜோசியம் பார்த்தல் போன்ற சடங்குகளைச் செய்பவர். இவரை அய்யர் என்றுதான் காலனி வாழ் மக்கள் அழைப்பார்கள். பிற வகுப்பினர் இவரைப் "பண்டாரம்" என்றுதான் அழைப்பார்கள். இந்த அய்யரை நாவலில் பதிவுசெய்யும்போது (கோவேறு கழுதைகள், 199ள் செடல், 2006) கூடுதலாக ஒரு பத்தி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே மாதிரி - ஆறுமுகம் நாவல் (1999) மொழிபெயர்க்கப்பட்டபோது - "சாண்டே குடிச்சவன" என்பதை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை. சாண்டு என்றால் பெண்களின் சிறுநீரைக் குறிப்பது. மொழி பெயர்ப்பாளர் சாண்டு என்றால் பெண்களின் மாதவிடாய், அழுக்கு, கழிவு என்பதாகத் தமிழ் லெக்சிக்கனில் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். கோவேறு கழுதைகள் நாவலில் (1994) "என்னோட லிபி" அவ்வளவுதான் என்று ஆரோக்கியம் என்ற பாத்திரம் சொல்லும். லிபி என்பது சமஸ்கிருதச் சொல். இச்சொல் எப்படி ஆரோக்கியம் என்ற பாத்திரத்திற்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியவில்லை. நாவலுக்குள் எப்படி அச்சொல் வந்தது என்பதும் எனக்குத் தெரியவில்லை. இச்சொல் தன்னியல்பாக வந்து விழுந்துள்ளது. இது சமஸ்கிருதச் சொல் என்று சொல்ல வேண்டுமா, வட்டாரச் சொல் என்று சொல்ல முடியுமா?
என் விருப்பத்திற்கேற்ப மொழியைப் பாத்திரத்தின் மொழியாக மாற்றுவதில்லை. ஒரு பாத்திரத்தின் மீதோ அதன் மொழியின் மீதோ நான் குறுக்கீடு செய்வதில்லை. மொழியால் வாசகரை ஈர்க்க நினைப்பது, பிரமிக்கவைப்பது என்பது படைப்பை ஊனப்படுத்தும்.
வட்டார வழக்குகள் குறித்துப் பேசுகிற நமக்கு எது எழுத்து வழக்கு, எது பேச்சு வழக்கு, எது வட்டார வழக்கு என்ற தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்குமான இடைவெளி எது, பேச்சு வழக்குக்கும் வட்டார வழக்குக்குமான இடைவெளி எது, அவற்றை எப்படி இனம் காண்பது, எந்த அலகால் வரையறை செய்வது? தீர்மானிப்பது? இதற்கு நடைமுறை சார்ந்த அணுகு முறை என்ன, விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை என்ன என்பது குறித்த தெளிவோ அக்கறையோ எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல மொழியியலாளர்களுக்கு, கல்வித் துறையைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல, சமூகத்திற்கேகூட இருப்பதாகத் தெரியவில்லை. இதில் தெளிவும் அறிவும் ஏற்படாதவரையில் மொழியின் ஒரு பிரிவான வட்டார வழக்குக் குறித்து நாம் எந்த அலகுகளையும் உருவாக்க முடியாது. அதுவரை எழுத்து மொழியையும் பேச்சு மொழியையும் வட்டார வழக்கையும் ஒரே வாக்கியத்தில் நம் தமிழ் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எழுத்தாளர்கள் மொழியியல் குறித்து அக்கறைப்படுவதில்€ல் மொழியியலாளர்கள் இலக்கியம் குறித்துக் கவலைப்படுவதில்லை. இந்தத் தனித்தனித் தீவுகள் ஒன்றிணையும்போது மட்டுமே மொழி குறித்து, வட்டார வழக்குகள் குறித்துப் பேசுவதில் அர்த்தம் இருக்க முடியும்.
"கைமுதல், கைப்பாவை, கையாலாகாதவன், கைநாட்டு, கைமாத்து, கைக்கிளி, கையை விரிச்சிட்டான், அவனுக்குக் கை நீளம்" ஆகிய சொற்களைக் கழனியூரன் என்பவர் வட்டார வழக்குச் சொற்களாகப் பட்டியலிடுகிறார் (குமரிக்கடல் - ஜூன் 2006 - பக்கம் 21, 22). இச்சொற்கள் எந்த வட்டாரத்திற்குரியவை என்பதைக்கூடக் கழனியூரன் குறிப்பிடவில்லை. இதே மாதிரி அ.கா. பெருமாள் தொகுத்த நாஞ்சில் நாட்டுச் சொல்லகராதியில் (2004) நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குகளாக "நக்கல், நடவு, சுண்டைக் காய், சுமைதாங்கி, குட்டிக்கரணம், கனகச்சிதம், அடம், அட்டூழியம், அடிமாடு" என்று பட்டியலிடுகிறார். அ.கா. பெருமாள் தொகுத்துள்ள சொல்லகராதியில் தமிழகம் எங்கும் உள்ள எழுத்து வழக்கு, பேச்சு வழக்குச் சொற்களையே அவர் தொகுத்துள்ளார். நம்முடைய வட்டார வழக்குச் சொல்லகராதிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது.
2000ஆம் ஆண்டு இந்திய அரசின் பண்பாட்டுத் துறை எனக்கு இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை வழங்கியது. இளநிலை ஆய்வு நல்கைக்காக நான் தொகுத்த "தலித்" சொல்லகராதி பாதியிலேயே நின்றுவிட்டது. காரணம் தற்போதைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையில் சாதி ரீதியான ஒரு வழக்குச் சொல்லகராதியை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது என் அனுபவத்தில் தெரிந்தது. இது வட்டார வழக்குச் சொல்லகராதிக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். சோதனைக்காக கி. ராஜநாராயணன் தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதி (1982), பெருமாள்முருகன் தொகுத்த கொங்கு வட்டாரச் சொல்லகராதி (2000), நான் தொகுத்த தலித் சொல்லகராதி (2002) ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தபோது மூன்றுக்குமிடையில் மிக நெருங்கிய உறவிருப்பது தெரியவந்தது. அந்த ஒப்பீடு தமிழ் வாழ்க்கைமுறை மிக வேகமாக மாறிவருகிறது என்பதைக் காட்டியது.
பிறரைக் காட்டிலும் மொழி குறித்து அக்கறைப்பட வேண்டியவன் எழுத்தாளன்தான். அவன்தான் வார்த்தைகளால் ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கிக் காட்டுகிறான். அதனால் படைப்பில் புதிய எழுத்து முறையை, புதிய மொழியைக் கண்டடைய வேண்டிய அவசியம் எழுத்தாளனுக்குத்தான் இருக்கிறது. அதற்கு அவன் மொழியை நடப்பியல் ஆய்வு முறையோடு, புதிய நோக்கில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மொழி குறித்த தெளிவும் பயிற்சியும் இல்லாமல் உருவாக்கப்படும் படைப்பின் மொழி உயிரற்றதாகவே இருக்கும். பண்டைக்காலத் தமிழை, இடைக்காலத் தமிழை, தற்காலத் தமிழை - தற்காலத் தமிழில் எழுத்து மொழியாக இருந்தாலும் சரி, வட்டார வழக்காக இருந்தாலும் சரி - ஏற்பட்டுள்ள மாற்றங்களை, வளர்ச்சிகளை, முன்னேற்றங்களைக் கணக்கில் கொண்டு செயல்படுவது படைப்பு மொழிக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நல்லது.

குறிப்பு: CIIL, French Institute of Pondicherryயும் இணைந்து நடத்திய வட்டார வழக்குகள் குறித்த கருத்தரங்கில் 13.8.2006இல் படிக்கப்பட்ட கட்டுரை.
நன்றி: காலச்சுவடு

1 comment: